கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Published Date: February 5, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார். 

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வர் மு க கருணாநிதி நடத்திய தமிழினம் 99 மாநாட்டின் விளைவாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின்கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணைய வழி தமிழ் கற்பிப்பதுடன் கணித தமிழ் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கருவிகளை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அறிவை பொதுமை செய்யும் நோக்கத்தில் தமிழ் மின்நூலகம் <https://www.tamildigitallibrary.in/>உருவாக்கப்பட்டு தமிழ் மொழி இலக்கியம் ,வரலாறு ,பண்பாடு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பருவ இதழ்கள் மற்றும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலை சுவடிப் பக்கங்களைப் பதிவேற்றம் செய்து உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படும் வகையில் கட்டணமில்லா சேவையினை வழங்கி வருகிறது. இந்த மின் நூலகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 10.5 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து பயணிக்கிறது.

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ் இணையக் கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலம் என்ற சிறப்பு இணையப் பக்கத்தை<https://www.tamildigitallibrary.in/kalaignar முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இப்பக்கத்தில் 955 அரிய ஊடகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் அள்ளித்தரும் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகின்றன.

எனவே சங்க இலக்கியங்களான பத்துபாட்டிலும், எட்டுத்தொகையிலும் உள்ள அறிவு செல்வங்களை இன்றைய தலைமுறை பெறுவது அவசியம். நம் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கும் அக வாழ்க்கையை எடுத்துரைக்கும் 211 பாடல்களும் தமிழர்களின் வீரம்,கொடை, புகழ், கடமைகள், கல்வி சிறப்பு முதலானவற்றை எடுத்தியம்பும் 141 புற பாடல்களும், அகமும் புறமும் சார்ந்து 14 பாடல்களும் என 366 பாடல்களை தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்து விளக்கவுரை ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய சங்க தமிழ் நாள்காட்டியையும் முதல்வர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், தமிழ் இணைய கல்விக்கழக இயக்குனர் சே. ரா. காந்தி, இணை இயக்குநர் ரெ. கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Media: Hindu Tamil